அவளொரு ஆரண்யம் - சக்தி ஜோதி

அவளொரு ஆரண்யம் – சக்தி ஜோதி

வான் பொய்ப்பினும்
தான் பொய்க்காத்
தன்மை கொண்டது
அக் காடு
கோடையோ, குளிரோ
பருவம் எதுவாயினும்
பசித்த வாய்க்கு
தேனும் ஊணும்
தேடாது கொடுக்கும்
வெங் கோடை
ஒன்றில்
பற்றிக்கொண்ட தீயில்
வெந்து கிடந்த மரங்களிடம்  சென்று
சிறுபறவையொன்று
தனக்காகத்
துளிர்க்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டது
அந்த வனம் முழுவதும்
ஒரு பறவையால் உருவாகியது
அந்த பறவைக் கூட்டம் முழுவதையும் வளர்த்தெடுத்தவை
முது மரங்கள்
காற்றின் சிறுதீண்டலுக்கு
பழுத்த இலைகளை உதிர்க்கும்
பெருமரமும்
எதிர் நிற்கும்
யாவற்றையும் புரட்டித் திருப்பும்
பெரும் சூறையி்ன் நடுவேயும்
வீழ்ந்துவிடாது பற்றிக்கொள்ளும்
பசுங்கொடியும்
ஒன்றில்  ஒன்றென  இழைந்திருக்கும்
அதன் சூட்சுமம் அறிந்தபோது  இயற்கையின்
முடிவுறாத திருவிழாவில்
தானுமொரு ஆரண்யமென
உணரத் தொடங்கினாள்.
– சக்தி ஜோதி