ஆழ் கடலிலிருந்து ஒரு அழுகுரல்.. - வ.இரா. தமிழ் நேசன்.

ஆழ் கடலிலிருந்து ஒரு அழுகுரல்.. – வ.இரா. தமிழ் நேசன்.

அரபிக் கடலின்
அலையோசையையும் மீறி
ஈனஸ்வரத்தில் ஒரு குரல்
என் செவிகளில்
ஈயம் பாய்ச்சுகிறது.
ஆயிரம் மைல்களுக்கு
அப்பாலிருந்து வரும்‌ அந்த  குரல்
யாசகம் கேட்டு அலையவில்லை;
தன் கைகளின் வலிமை
கொஞ்சம், கொஞ்சமாக
குறைந்து கொண்டே வருவதை
உணர்ந்த கடலோடியின்‌குரல்.
இப்போதும் கூட
அக் குரல்
இந்த அரசு தன்னை
காப்பாற்றி விடும் என
கதறவில்லை;
நெஞ்சுக்குள் கடல் கொண்ட
அப்பாவின் இருமல்
செவிப்பறைகளில் கேட்கிறது.
மகளின் சீமந்தத்திற்கு
வாங்கி வைத்த வளையல் ஒன்று
கருவிழி நனைத்து செல்கிறது.
கடலலை நனைக்காத கருவிழியை
நினைவலைகள் வந்து
மூழ்கடிக்கிறது.
என்ன செய்வேன்
இத்தனை நாளாய்
இழுத்து பிடித்த
இந்த உயிரை
இனியும் என்னால்
பிடித்து வைக்க இயலாது
நான்‌ கொஞ்சம், கொஞ்சமாய்‌
கடலுக்குள் சென்று கொண்டிருகிறேன்
இனி என்னால் கையசைத்து
என்இருப்பை உணர்த்த
இயலாது.
யாராவது வருவார்
எப்படியோ பிழைத்துக் கொள்ளலாம்
என்ற நம்பிக்கையும்
என்னோடு சேர்ந்தே
மூழ்கிக் கொண்டிருக்கிறது.
உடலில் ஆங்காங்கே காயங்கள்
மீன்கள் தின்று போக
மீதமிருக்கும் உடலையாவது
என்னவளிடம்
கொண்டு சேருங்கள்.
அவளுக்கு  மட்டும்  தான் தெரியும்
 இது நான் தான் என்று!
– வ.இரா. தமிழ் நேசன்.