எதிரொலிக்கும் சொற்கள் - சக்தி ஜோதி

எதிரொலிக்கும் சொற்கள் – சக்தி ஜோதி

மழை ஈரம் படிந்திருக்கும்
தேவாலயச் சுவரில்
மனம் கசிந்து
தலை சாய்த்திருந்தவளை
மாடப்பிறையில்
சிறகொடுங்கி அமர்ந்திருக்கும்
ஒற்றைப்புறா
இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தது
யாரிடமும்
எக்காலத்திலும் சொல்லவியலாத
தனது கதையொன்றில்
ஆழ்ந்திருந்தவளை
கலைக்க விரும்பாது
ஓயாத
தனது குரலை ஒலிக்கவும் மறந்து
அவ்விடத்தை நிசப்தமாக்கியது
மெல்லிய சிறகசைவு
கூரையில் மோதி
பேரோசையென எதிரொலிக்க
அவள் நினைவுக்குள் ஒளிந்திருக்கும்
சொற்கள் தானோ அவையெனக் கருதி
திடுக்கிட்டாள்
அதுவரையிலும் காத்து வைத்திருந்த
தன்னுடைய இரகசியம்
பறவையோடு
வானேகி விடுமோவென அஞ்சி
பறவையிடமே தன்
பிரார்த்தனையைத் தொடங்கினாள்.
– சக்தி ஜோதி