இருவேறு திசைகளின் ஒற்றைப்புதிர் - சக்தி ஜோதி

இருவேறு திசைகளின் ஒற்றைப்புதிர் – சக்தி ஜோதி

சாளரத்தின் கண்ணாடியில்
படிந்திருக்கும் பனித்திரை விலக்கி
மெதுவாக உள்நுழைந்த
அதிகாலை வெளிச்சம்
முந்தின இரவின்
புதிரொன்றை
அவிழ்க்கத் தொடங்கியது
எப்போதுமிருக்கும் வானம்தான்
என்றபோதும்
விடியலின் வெளிர் மஞ்சளிலிருந்து
அந்தியின் பொன்சிவப்புவரை
அவளிடம் அவளுக்கென
பொழுதுதோறும்
பிரத்யேக நிறம்கூட்டி நிற்கிறது
முற்பொழுதில்
விதிர்த்து மேனியை நடுக்குறச் செய்யும்படி
சுடர்ந்து திரளும் மேகம்
பிற்பாதியில் மாளாப்பரவசம் வழங்கியபடி
அடர்ந்து ஒளிரத் தொடங்கியதும்
அறிந்து கொண்டாள்
அவ்விசித்திரப் புதிரினின்று வெளியேறும்
இருவேறு திசைகளை.