நிலமென்னும் நல்லாள் - சக்தி ஜோதி.

நிலமென்னும் நல்லாள் – சக்தி ஜோதி.

மண்
குளிரப் பொழிகிறது
மழை
ஈரத்தில் நனைந்த
வேர்களின் மகிழ்ச்சியை
கிளை நடுவே மலரும்
பூக்கள் பாடுகின்றன
தேன் குடிக்கத்
தேடிவந்த தும்பிகள்
கால்களில் மகரந்தத்தோடு
அடிவானம் நோக்கிப்
பறக்கின்றன
அங்கிருந்து
அவசரம் ஏதுமின்றி
எழுந்து வருகின்ற சூரியன்
முகிழ்த்திருக்கும்
காய் ஒவ்வொன்றையும்
கதிர்களால்
தொட்டுத் தொட்டு
கனியச் செய்கிறான்
பகலில் பழுப்பவை
அணில்களுக்கும் கிளிகளுக்குமாக
எஞ்சியதைத் தேடி
இரவில் வரும்
வெளவால்கள்
விம்மி
தன்
விரகம் தணிக்கிறது காடு
காலம் தவறி நுழைகிற
கடைசிப் பறவைக்கும்
இலை மறைவில்
எங்கோ
ஒளிந்திருக்கிறது ஒரு கனி
அவள்  நிலத்தில்
ஒருபோதும் தவறுவதேயில்லை
பருவம்.❤
– சக்தி ஜோதி.