பிறகு -- என்.டி.ராஜ்குமார்

பிறகு — என்.டி.ராஜ்குமார்

நீயும் குழந்தைகளும்
என்றென்றைக்கும் என்னுடையவர்கள் மட்டும்தானென்று
நான் நம்பவில்லை.
இதுபோன்ற துர்விதி
என்னை வேட்டையாடுமென்றால்;
நாளை உங்களை ரட்சிப்பதற்கான
எனது கடைசி தந்திரமும் தவறிப்போகும் பட்சத்தில்,
உனக்கு விருப்பமில்லை என்றாலும்
உனது இதயம் வேறு ஒருவனுடைய சூடு தேடிச் செல்லும்.
அவன் பரிசாய் தருகின்ற
இனிப்புப் பலகாரங்களிலும்
விளையாட்டுச் சாதனங்களிலும்
நமது குழந்தைகள் சந்தோஷத்தில் மூழ்கிப்போவார்கள்.
பிறகு, பிறகு
அர்த்தமற்ற இந்த வாழ்க்கையின்  வெள்ளரித்தோட்டத்தில்
நான் வெறும் சோளக்கொல்லை பொம்மைதான்.
மலையாளத்தில்: பவித்ரன் தீக்குன்னி
தமிழில்: என்.டி.ராஜ்குமார்