கண்ணீர் வருகிறது . - திலகவதி

கண்ணீர் வருகிறது . – திலகவதி

ஆடாமல் அசையாமல் எரியும்
புத்த பிட்சுகள்
சொல்லாத அறத்தினை
அறைந்து சொல்ல
எரிந்து மடிந்தாயோ என் மகளே… !!
வர்க்கப் பசி அடங்க
அவர்கள் பற்ற வைத்த அடுப்பிலே
விறகாகி விறைத்தாயோ என் மகளே ??
நீ கும்பிட்ட சாமிகள்
ஏறெடுத்து உனை பார்க்க
கற்பூரமானாயோ
என் மகளே  ?
உச்சி வெயில் சூட்டையும்
தாங்க மாட்டோம்
உச்சந்தலை பற்றி எரிய
துடித்தாயோ என் மகளே ?
வீதியெல்லாம் விளையாடி
மண் ஒட்டிய தோலெல்லாம்
உருகி உருகி ஊற்றியதோ என் மகளே ?
ஒன்றரையாண்டு வயதிலேயே
ஒட்டுமொத்த வாழ்வின் வலியை
தீ விழுங்கி உணர்ந்தாயோ என் மகளே ?
உன் சட்டையெல்லாம் கருகி விழ
கரி கட்டையாய் உடல் விறைக்க
இங்கு தீயெல்லாம்
நீயாகவே தெரிகிறது
என் மகளே !!
எண்ணெய் வைத்து வாரிய தலையில்
மண்ணெண்ணை ஊற்றி
பற்ற வைக்கத் துணிந்த கரங்கள்
நடுங்கிப் பொசுங்கியதோ என் மகளே?
அள்ளி அள்ளி கொடுத்த முத்தங்களை
வாரி சிவந்த கண்ணமெல்லாம்
செந்தீ பருகி பஸ்பமானதோ என் மகளே ?
குழலினதல்லவே
யாழினிதல்லவே
என் மகளின்
மழலைச் சொல்லெல்லாம்
“அம்மா அம்மா”
என்று கடைசி அலறலில்
அடங்கிப்போனதோ என் மகளே ?
அ ண்ணா ஆவண்ணா
கற்கும் முன்னே
“அ”திகார “ஆ”திக்கம்
கற் றெரிந்தாயோ என் மகளே ?
மரணம் என்ற சொல்லறியும் முன்னமே
மரண பயம்
கண்டு துடித்தாயோ என் மகளே ?
என்ன தெரியுமடி உனக்கு
என் மகளே …
கந்து வட்டி தெரியுமா ?
அதை ஒழிக்க வந்த சட்டத்தின் கதை தெரியுமா ?
காசு இல்லை என்றால்
கருகி சாக வேண்டும் என தெரியுமா ?
நீ வாழும் உரிமை
உன்னிடம் இல்லை என தெரியுமா ?
உன் சாவுக்கு நிவாரண நிதி வீசுவார்கள் தெரியுமா ?
அத்தனையையும் அழகாக
கடந்து போவார்கள்
அதுவாவது தெரியுமா ?
மகளே…
உன்னை மக்க வைக்கப்போகும்
மண்ணிற்கும் மனசாட்சி இருக்கலாம்…
உன்னை இன்னும் ஓராண்டு கழித்து
மெது மெதுவாய் அது மென்று முழுங்கலாம்…
பிறந்த ஒன்றரை வயதிலேயே
அவர்களின் ஆதிக்க பசிக்கு
உன்னை வேக வைத்து
வாங்கிய கடனுக்கு வட்டி போட்டு
உன்னை சாம்பலாக்கிய
இந்த ஆளும் வர்க்கம்
நிச்சயம் மனசாட்சியை
உன்னை எரித்தது போல்
என்றோ எரித்து விட்டது…
உன்னை முத்தமிடும் – என்
உதடுகளில் பற்றும் இந்த தீ
உறுதியாய் மறைந்துவிடும்….
உன் பிஞ்சுடலை
எரிக்க வந்த எண்ணெயையும்
உன்னை காக்க முடியாத
என்னையையும் நிச்சயம்
மன்னித்துவிடாதே என் மகளே….
-திலகவதி