செம்பருத்தி - அய்யப்ப மாதவன்

செம்பருத்தி – அய்யப்ப மாதவன்

எத்தனையாவது செம்பருத்தி இதுவென்று தெரியவில்லை. என் வீட்டு மாடியில் உதிர்ந்த வண்ணமுள்ளது.
மலரும்பொழுதெல்லாம் நானும் மலர்ந்துகொள்கிறேன். அது சோர்ந்து சுருங்கி இவ்வுலகைவிட்டுச் செல்லும் கணத்தில் என் இதயம் வருத்தத்தில் ஆழ்ந்துவிடும்.
அதனழகு மாடிக்குப் போகும்பொழுதெல்லாம் ஈர்த்துக்கொண்டே இருக்கும். ஆனால் அந்த மலருக்கு பிறரை ஈர்க்கும் எண்ணமெல்லாம் இருப்பதில்லை. நான்தான் அதன் வசீகரத்தில் கிறங்கிப்போகிறேன்.
புகைப்படக்கருவி வழியே மலரைப் பார்த்து பார்த்து அந்த மலராகவே எத்தனை கணங்களிருந்தேன் என்று சொல்வதற்கில்லை.
எத்தனையோ இதழ்களில் மலர்ந்து இவ்வுலகை காண்கிறது. இயற்கை எப்போதும் இது போன்ற மலர்களாய் எத்தனையோ வடிவங்களில் இருக்கிறது.
மலர்வதன் வழியேயும் உதிர்வதின் வழியேயும் வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனத்தை எத்தனை அழகாய் இவ்வுலகிற்கு வெளிப்படுத்துகிறது.
அழகிய மலரைக் காண்கையில் எல்லாம் ஏன் நான் ஒரு மலராக இருந்திருக்கக் கூடாதென்று தோன்றும்.