சுதந்திரம் - வ.இரா.தமிழ்நேசன்

சுதந்திரம் – வ.இரா.தமிழ்நேசன்

சுதந்திரம் ஒரு அற்புதமான சொல். ஆனால் நம் புரிந்துணர்வில் சுதந்திரம் அற்புதமாக இருக்கிறதா என கேள்வி எழுகிறது. எது சுந்திரம் .. எது கருத்து சுதந்திரம் … எது விமர்சன சுந்திரம்…. சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகள் அற்றதா?  சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? சுதந்திரம் இருக்கிறதென்பதற்காக எப்படி வேண்டுமானாலும் விமர்ச்சிக்கலாமா?
அப்படி கருத்து சுதந்திரம் பேசுபவர்களும், எதிர்வினை ஆற்றுபர்களும் தங்களுடைய கருத்தை, விமர்சனத்தை எல்லா தளத்திலும் வைப்பதுண்டா? அப்படி எல்லையற்ற சுதந்திர மனிதன் யாராவது உண்டா?  இங்கே அனைவருக்குமே ஒரு அரசியல் உண்டு, அவரவருக்கு அவரவர் அரசியல் மட்டுமே பிரதானம். அரசியல் என்றவுடன் தேர்தல் அரசியல் பற்றியோ, அரசியல் கட்சிகளின் அரசியல் பற்றியோ யோசிக்க வேண்டாம்.  நான் கூறுவது நம்முள் இருக்கும் அரசியல். தனிமனித அரசியல்.
        சுதந்திரம் என்பதே கட்டுப்பாடுகளுடன் கூடியது. உனது சுந்திரம் அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்காதவரை அது சுந்திரம். அப்படி அடுத்தவருடைய சுதந்திரத்தை பாதிக்குமானால் அதற்கு பெயர் ஆதிக்கம். ஆக இங்கு அனைவரிடமும் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. அப்படியானால் அனைவரும் சும்மா இருந்து விடலாமா? அப்படியல்ல நாம் ஒரு கருத்தை சொல்லும் போது அதற்கு எதிர் வினை வரத்தான் செய்யும். அப்படி எதிர்வினை வரும்போது தன் விவாதத்தை முன்வைக்கலாமே ஒழிய எதிர் கருத்தே சொல்லக்கூடாதென்பது கூடாது. நேற்று மும்பை தமிழ்ச் சங்கத்தில் மரபின்மைந்தன் முத்தையா பேசும் போது ஒரு கருத்தை முன்வைத்தார் ; அதாவது உலிகில் மொத்தமே 60 கருத்துகள் தான் உள்ளது. இந்த 60 கருத்துகளுக்குள்  தான் அரிஸ்டாட்டில் பேசினார், சாக்ரடீஸ் பேசினார், பெர்னாட்ஷா இலக்கியம் படைத்தார் என்றார்.  தவறியும் பெரியாரோ, அம்பேத்கரோ , இந்தியாவின் தத்துவ ஞானிகளோ  அவர் நினைவில் வரவில்லை. போகட்டும் , அது அவருக்கான அரசியல்.
        நடுநிலையாளர்கள் என சிலர் சொல்லிக் கொள்கின்றனர். அப்படி நடுநிலையாளர் என்று ஒருவராவது உண்டா? முதலில் நடுநிலை என்ற ஒன்று உண்டா? அதெப்படி நடுநிலை என்று ஒன்று இல்லாத போது நடுநிலையாளானாக முடியும். ” ரெண்டும் கெட்டான்” என்று கிராமத்தில் சொல்வார்கள். நடுநிலை என்று யாராவது சொன்னால் எனக்கு “ரெண்டும் கெட்டான்”  என்ற சொல்தான் நினைவுக்கு வரும்.
ஆக அனைவரும் ஏதோவொரு சார்பு நிலையில் தான் இயங்குகின்றனர் என்பது தான் உண்மை.
      அழகைப் பற்றி விவாதிப்பது தவறா? அழகைப் பற்றி  அழகாக விவாதிக்கலாம். யார் அழகு என்று வினா இல்லாமல்? அப்படி வினா எழுப்பினால் இரண்டில் ஒன்று அழகு என் தீர்ப்பெழுத வேண்டுமல்லவா?  ஒன்று அழகுகென்றால் மற்றொன்று என்ன?  அரை அழகு, முக்கால் அழகென முடிவுரை எழுதுவீர்களா? அபத்தமாக இல்லையா? முதலில் அழகென்றால் என்ன ? நடையா? உடையா? தோலின் நிறமா? தோலின் வனப்பா? முகமா? உடலமைப்பா? பேசுகின்ற விதமா? எது அழகு ?  வரையறுக்க முடியுமா? காக்கையும், குருவியும் தங்களுக்குள் கூடிப் பேசுமோ யார் அழகென்று.
பெண் என்பவள் வெறும் அழகு மட்டும் தானா?
பெண்ணை வெறும் அழகாக மட்டும் பார்ப்பது ஆணாதிக்கத்தின் மறுபக்கமல்லவா? பெண்னென்றால் அன்பு, பெண்னென்றால் தாய்மை, பெண்னென்றால் தெய்வம் அப்படித்தானே சொல்கிறது நம் பண்பாடும், கலாச்சாரமும்.  தாய்மையை விட அழகு வேறொன்று இருக்க முடியுமா?
      திரும்பவும் சுதந்திரத்திற்கே வருகிறேன். சுதந்திரம் என்பது மனித சிந்தனைகளுக்கு உரமளிப்பதாக இருக்க வேண்டும். மனித
நேயத்தை வளர்த்தெடுப்பதாக இருக்க வேண்டும். நான் என்ற அகந்தையை அழித்து நாம் என்ற  எண்ணத்தை உருவாக்க வேண்டும். “”யாதும் ஊரே யாவரும் கேளீர்”  என்ற உலகச் சிந்தனையை  உரக்க சொல்வதாக இருக்க வேண்டும்.  உலகிலுதித்த அத்துனை தத்துவ ஞானிகளும், புரட்சியாளர்களும், அறிஞர்களும், அறிவியலாளர்களும் தம்மை, தம் அறிவை, ஆற்றலை மானுடம் முழுமைக்கும் பொதுமையாக்கி சென்றனர்.
    நம்முடைய   சுதந்திரம்  நம்மை அத்திசையை நோக்கி அழைத்துச் செல்கிறதா ? எனக்கேட்டால் இல்லை என்றே பதில் வரும்.
  ” சுதந்திரமாக
    நீந்துகின்றன மீன்கள்
    கண்ணாடித் தொட்டிக்குள்”
ஆம் நாம் பல நேரம் தொட்டியை விட்டு வெளியே வருவதில்லை.  பறவையென சிறகை விரித்தாலும் நமக்கான வானத்தை நாமே கட்டமைப்போம்.
     வ.இரா.தமிழ்நேசன்.