வசீகரமான கவிதை_அய்யப்ப மாதவன்

வசீகரமான கவிதை_அய்யப்ப மாதவன்

உன் பார்வைகளில் வீழ்ந்த சூர்ய ஒளியில்
கானகம் ஒளியானதை அறிவாயா
அரற்றிய காற்றினில் உன்னழகு
ததும்பியது தெரியுமா
அமைதி பூத்த தனிமையினூடே
உன் யெளனத்தில்
விண்மீன்களின் மினுங்கல்
பெளர்ணமியின் சீதளம்
நதிக்குளிர்மை
வனப்பட்சிகளின் இசை
நீ நான் கண்ட அதிசயமென்றாகிவிட்டது
உன்னைக் கண்ணுறும் பொழுதில்
நான் இல்லாமல் போவது நிகழ்ந்துவிடும்
சலசலத்த இலைகளில்
ஒலிப்பதாயிருந்தன
உன் சதங்கைகள்
கேசத்தின் அசைவொலியிலும்
உன் செளந்தர்யத்தை உள்ளுணர்ந்தேன்
வசீகரத்தின் உள்ளீடுகளைக் கொண்டவள் நீ
எத்தனை கவிதையிலும்
இயற்றிட முடியாது உன்னை
அதோ அகன்ற பசும்வெளியில்
பசுந்தளிராய் அசைந்தாய்
என் விரல் தீண்டிய உன் நுனியில்
மறைந்துகொண்டிருந்தேன்.