ஒரு குவளை நீர் நீ... அய்யப்ப மாதவன்

ஒரு குவளை நீர் நீ… அய்யப்ப மாதவன்

மழை மேகங்களுடன் வந்திருந்தாய்
ஊழிக்காற்றில் மரம் போல
விழுந்த பொழுதில் தாங்கின
உன் மெல்லிய கரங்கள்
அநாதையிடம் தாய்மைபோல
நெருங்கியிருந்தாய்
பாலைவனத்தில் ஒரு குவளை நீரானாய்
இணையிழந்த பறவையிடம்
காதலியாகியிருந்தாய்
இரவுகளின்  வேட்கையை
காதலால் பற்றிக்கொண்டாய்
உன் கனிந்த இதயத்தால்
தீராத் துயர்களைத் துடைத்தாய்
அம்பு பாய்ந்த பட்சிக்கு
கருணை மருந்திட்டாய்
வலுப்பெற்ற சிறகுகளால்
ஆகாயத்தைக்கூட கடந்தேன்
ஸபரிசத்திலும்
பாய்ச்சலில் புரளும் இரவுகளிலும்
பிறந்துவிட்ட சிசுவைப்போல
புத்துணர்ச்சி அடைந்தேன்
இனி இல்லையென்றானது என்
இலையுதிர்காலம்.