அந்த முத்தங்கள்  - கவிதா இலட்சுமி

அந்த முத்தங்கள் – கவிதா இலட்சுமி

ஏதோ ஒரு படத்தை
கிறுக்கிவிட வேண்டும் போல வருகிறது.
அந்தக் கவிதையை
எழுதித் தொலையலாம் எனத் தோன்றுகிறது.
அனைத்தும் கொன்று
ஆடிக்களைக்கலாம் என்றும் இருக்கிறது.
ஒரு தூரிகையைப் பிடிக்கவோ
எழுதுகோளை எடுக்கவோ
முத்திரைகளைத் தொடுக்கவோ
நகர்கையில்,
விரல்களின் இடுக்குகளில் வழிந்தோடும்
அந்த முத்தங்கள் நினைவில் வருகின்றன
கனவின் உயிரணுக்களாய்
கபாலத்தில் கருவேற்றுகின்றன
இருந்தும்
பிரசவங்கள் நிகழ்வதற்கில்லை
என் அழகிய சிசுக்களையெல்லாம்
உயிரின் உள்ளேயே ஏந்தி முத்தமிட்டு
சுவாசப்பைகளின் நடுவே புதைத்துவிடுகிறேன்
அதே கணம்
ஒரு தேர்ந்த கொலையாளியைப் போல
தேநீர்க் குவளையோடு
எதையும் கடந்து போகிறேன்
         – கவிதா இலட்சுமி