எல்லாமுமாகிய நான் -  இரா. தமிழ் நேசன்.

எல்லாமுமாகிய நான் – இரா. தமிழ் நேசன்.

நான் நதி
ஓடிக்கொண்டேயிருப்பேன்
இருபுறமும்
வளம் சேர்த்த வண்ணம்!
நான் காற்று
வீசிக் கொண்டேயிருப்பேன்
மனிதர்கள் சுவாசிக்க!
நான் விதை
விழுந்து கொண்டேயிருப்பேன்
விருட்சமாகி கனிகள் தர!
நான் மலர்
என்னுள் மணத்தினை
இருத்தி வைத்துள்ளேன்;
வசிகரமான ஸ்பரிசத்தில்
இதழ் விரித்து மணத்தை
காற்றில் பரப்புவேன்.
நான் ஒரு பறவை
என் சிறகின்
நீள, அகலத்தால்
இந்த உலகின் விட்டத்தை
அறிவேன்.
நான் ஆகாயம்
மேகங்களால் நிரப்பிக் கொள்கிறேன்
என்னை;
கார்முகிலாக மாறி
மழைபொழிய.
நானே பிரபஞ்சம்
என்னுள் எண்ணற்ற
பால் வீதிகள்;
மனித ஆற்றலுக்கு
அதிசயத்தையும்; ஆச்சரியத்தையும்
வரமாக்குவேன்.
நானே மண்
மிதிப்பவரையும்
விழாமல் தாங்குகிறேன்.
எல்லாமுமாகிய
நான் நானாகவும்
இருப்பதுண்டு.
 – இரா. தமிழ் நேசன்.