அனிதா - மனுஷி

அனிதா – மனுஷி

இராப்பகலா கண்முழிச்சு
கண்ட கனவெல்லாம்
மண்ணுக்குள்ள போய்டுச்சு.
கண்மணியே அனிதா
உன் கனவும் தான் செத்துடுமோ.
ஏழைங்க படிச்சு வர
எதுக்கு இங்க நீட் தேர்வு?
சிரிச்சபடி நீ கேட்ட கேள்வியும் தான் செத்திடுமோ?
கத்துக்கிட்ட கல்விக்காக
கட்ட விரல வெட்டின காட்டுமிராண்டிங்க.
இத்தனை வருஷமாயும்
இன்னமும் மாறலயே.
கழுத்தறுத்த பாவிகள் இங்க
கம்பீரமா பேசுறாங்க
மருத்துவம் இல்லைனா என்ன
மண்ணாங்கட்டி இருக்கேன்னு.
ஏழைங்க வயித்தில் அடிச்சு
ஏய்ச்சு பிழைக்கும் ராட்சசன்கள்
எகத்தாளம் பேசிப் போகுதுங்க.
மக்களைக் கொன்னுப் போட்டு
பிணத்து மேல ராஜாங்கம் நடத்துதுங்க.
வயக்காட்டு வேர்வையில
வளர்ந்த ஆலமரம்
சாதி காத்தடிச்சு
சட்டுனு தான் சாஞ்சிடுச்சு.
சிறகடிச்சு பறக்கும்
கனவுல மிதந்த மக
செத்த பொணமா
உயிரழிஞ்சி போய்டுச்சு.
படிச்சு வாங்கிய மார்க் எல்லாம்
தூக்குல தொங்குதம்மா.
தூங்கிக் கிடந்த மனசுக்குள்ள
செந்தீயா எரியுதம்மா.
ஆண்ட பரம்பரைங்க
முகத்துல காறித்துப்ப
உன் உசுற பணயம் வச்ச.
அடுத்த தலைமுறைக்கு
செங்கொடியை நட்டு வச்ச.
கல்விக் கொலைக்கு இனி
முற்றுப்புள்ளி வைக்கவேனும்.
காவிகளின் முகத்தின் முன்பு
பறை முழக்கிக் கொட்ட வேனும்.
– மனுஷி