அப்துல் ரஹ்மான்

அப்துல் ரஹ்மான்

ஆயிரமாயிரம் கவிஞர்களுக்கு
ஆள் காட்டி விரல் பிடித்து
“பால் வீதி”யில்
நடை பழக்கி தந்த
கவித் தந்தை!

கவிஞனாகும் ஆசையில்
பலர் எடுத்த
எழுது கோலை
தன் “ஆலாபனை”யால்
மந்திரகோலாக மாற்றிய
சூத்திரதாரி!

அப்துல் ரஹ்மானை தா
என கலைஞரையே கேட்க வைத்த
வானம் பாடி!

கஜல்களையும், ஹைகூவையும்
கைபிடித்தழைத்து வந்து
தமிழகத்து வீதிகளில்
“தேவ கானம்” இசைக்க வைத்த
தமிழ்த் தும்பி!

அயல் நாட்டு மகரந்தத்தையெல்லாம்
தன் சிறகுகளின் இடுக்கில்
அள்ளி வந்து
தமிழகத்து நந்த வனங்களை
சூல்கொள்ளச் செய்து
பூக்காலம் நிகழ்த்தி காட்டிய
பாவலர்களின் சரணாலயம்!

“நெருப்பை அணைத்த நெருப்(பு)” – இந்த
“பறவையின் பாதை”
“முட்டைவாசிகள்” குடியேற
தன் கவிதை கருவறையை
வாடகைக்கு தந்த
வாடகைத் தாய்!

“மரணம் முற்றுப் புள்ளியல்ல”
அது ஒரு தொடக்கமென
“விதைபோல் விழுந்த(வன்) ”
பெருங்கவி!

நாளை நம் தமிழாம்
எம் தலைவருக்கு வாழ்த்துப்பா எழுதவேண்டிய நீ – இன்று
எங்களை இரங்கற்பா
எழுத வைத்துவிட்டாயே?

கட்டை விரல் கேட்காத
துரோணாச்சாரியாருக்கு
இந்த ஏகலவனின்
கவிதை வரிகள்!