மழை  - கவிதாயினி எழில்விழி.

மழை – கவிதாயினி எழில்விழி.

இன்று மழை பெய்தால்
நன்றாக இருக்கும் தானே?
கேட்ட கொடுமைக்கு
பிடித்து மடியிருத்தி
மழைக்கவிதை ஆரம்பிக்கிறாய்சக்கரவாகங்கள் குடித்துச்செரித்து
வெளியிடும் எச்சில்கள்
பூமியை நனைக்கும் போது
நீங்கள் அதற்கு மழையென்று
பெயரிட்டு அழைக்கிறீர்கள்.

நீர் வற்றிய குளத்துச்சேற்றில்
உயிர்ச்சமாதி ஆகிச்செத்த
மீன்களின் கண்ணீர்
மீண்டும் பெய்து முட்டை நனைத்து
உயிரை உயிர்ப்பிக்கும் உயிர் நீராய்
பெய்வதை நீங்கள்
மழையென்று அழைக்கிறீர்கள்.

அடப்போடா…….
மடியிலிருந்து திமிறி எழுந்து
உன்னை மடியிருத்தி கொள்கிறேன்.
மழைக் கவிதை கேட்டால்
மழை தத்துவம் சொல்கிறாய் …

மழை இயல்பானது.
உன் சிரிப்பைப் போல
உன் நடையைப் போல
உன் கிண்டல் போல
உன் காதல் போல
உன் பார்வைக்குறும்பில்
நான் பருவமடைந்ததைப்போல
மழை இயல்பானது.

விருப்பமில்லா திருமணத்தின்
முதலிரவு கனவின் போது
சொல்லப்பட்ட முத்தலாக் அது.
முதல் தலாக்கில் மேகக்கதவு திறந்து
மறு தலாக்கில் விண்வழி பறந்து
கடைசி தலாக்கில் உன்னைத் தொட்டு
பின் மண்ணைத் தொட்டு
முக்தி அடைந்த என் கண்ணீர் போன்றது.

முகத்திரை இல்லாமல் வரும்
என்னை நனைத்து மகிழ்ந்தது
நேற்று பெய்த அந்திமழை .
இன்று ஏமாறப்போகிறது
முகத்திரையுடன் நடக்கும் என்னை
இன்றும் நனைத்து மகிழ்கிறதே.
அடையாளம் என்ன?
திரும்பிப் பார்க்கிறேன்.
நேற்றைப் போலவே
பின்னால்தான் வருகிறாய்.

கண்களை மூடித்தான்
மழைப்பேச்சு பேசினேன்.
இதோ மழையில் நனைகிறேன்.
மடியை விட்டு எழுந்திருடா ….
உன் வியர்வை துடைத்து விட்டு
நான் வீட்டுக்கு கிளம்பணும்.

– கவிதாயினி எழில்விழி.