அய்யனாரும் அருளாடியும் - கவிதாயினி எழில்விழி

அய்யனாரும் அருளாடியும் – கவிதாயினி எழில்விழி

பத்து வருசத்துக்கு பின்னால
எல்லை காவல் அய்யனாருக்கு
பங்குனில கொடை எடுக்கணுமாம்.
தகவல் வந்திருக்கு
அய்யனாருக்கும் எனக்கும் இடையில
கணக்கு ஒண்ணு தீக்கணும் -அதுக்கு
கண்டிப்பா நான் போகணும்.

அய்யனாரு அருளாடி அங்கமுத்து
அண்ணன் மவ செல்லம்மாவும்
கீழத்தெரு அம்பட்டன் மவன்
அழகுராசாவும் காதலிக்கறதா
ஊருக்குள்ள அப்ப ஒரு பேச்சு உண்டு.
உண்மைதான்னு எனக்கும் தெரியும்.
செல்லம்மா எங்கிட்ட மறைக்க மாட்டா.

எலந்தக்காட்டு இருட்டுல இவங்க
பேசிட்டு இருந்தாங்க.
தூரத்து ரெயில் வெளிச்சத்துல
அங்கமுத்து பாத்துட்டதா
செல்லம்மா தான் எனக்கு சொன்னா,
இரண்டு பேரும் இணைஞ்சதா
ஊருக்கு சொன்னது இந்த
அய்யனாரு அருளாடிய அன்னிக்குத்தான்.

சனங்க இடம் கேட்டதுக்கு
அய்யனாரு சொன்னாரு,
மாட்டுத்தடம் வழி போனா
ஏரிக்கு நடுவுல உள்ள
ஆலமர மணல் திட்டுல ன்னு
அய்யனாரு பொய் சொன்னாரு.
அடுத்த நாள் இரண்டு பேரும்
அந்த ஆலமரத்துல
நாண்டுகிட்டு செத்துட்டாங்க.
அய்யனாரு உண்மை சொன்னதா
அருளாடி பீத்திக்கிட்டாரு.

அடுத்த வருடம் அதே இலந்தைக்காடு
அதே ரயில் வெளிச்சம்
அதே அங்கமுத்து
ஆனால்
நாங்க இணைஞ்சது மட்டும் நிசம்.
கொடை விழாவுல ஒரு ராணுவ ரகசியமா அய்யனாரு சொன்னதா
அருளாடிதான் சொன்னாரு.
அந்த ஆலமரம் தான் இதுக்கும் சாட்சியாம்.
அங்கதான் புடிச்சது அய்யனாருக்கு சனி

உண்மைய தெரிஞ்சிக்கணும்
ஊரு சனம் சாட்சி வேணும்.
கொண்டா மூணு கற்பூரம்
கைய நீட்டிக்குவோம்.
எழில் விழிக்கு ஒண்ணு.
சரவணனுக்கு ஒண்ணு
மன்னிச்சிக்க அய்யனாரே.
உன் அருளாடிக்கும் ஒண்ணுன்னேன்.
அடிடா மேளத்த, ஏத்துடா சூடத்த …….
அன்னிக்கு மலையேறுன அய்யனாரு
அதுக்கு பிறகு வரவேயில்ல.

– கவிதாயினி எழில் விழி