வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென... சக்தி ஜாதி

வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென… சக்தி ஜாதி

வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென…

கடற்கன்னிகள்
கரையேறி வந்து
காதலொருவனைத் தேடி
கண்ணீர் விட்டுத் திரும்பிய கதைகள்
சொல்லப்படும் நிலத்தை சேர்ந்தவள் அவள்

அவளறிந்த கடலும்
அதன் அலைகளும்
அறிவொண்ணா ஆழமும்
அதில் விளைந்து கரை சேர்ந்த மீனும்,
பவளமும்
காய்ச்சி வடித்த உப்பும்
இன்ன பிற பொருட்களும் கூடியவளை
உப்பு மணக்கும்
உடலுக்குரியவளாக ஆக்கியிருக்கிறது

கண்ணையும் கருத்தையும் நிறைக்கும்
பதின்ம வயதின் கனவுகளில்
மூழ்கியிருக்கும் அவளுடலில்
அலையாடியபடி இருந்தது
ஒருகடல்

ஊரினரும்
உடன் பழகுவோரும் அறியாத
அக்கடலின்
முத்தைத் தேடி
அயல் நிலத்தவனொருவன்
அவ்விடம் வருவானென
நம்புகிறவள்
கடற்பாறைகளுக்கிடையே
வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென
மெலிந்தாடிக் கொண்டிருக்கிறாள்
தனதாழத்தில்