இறுதிப்போட்டி - கவிதாயினி எழில்விழி

இறுதிப்போட்டி – கவிதாயினி எழில்விழி

ஜெயிப்பதில்தான் நமக்குள்
அனுதினம் போட்டி .
ஆனாலும் கூட ஒருபோதும்
கொடுப்பதில்லை நாம் பேட்டி.

நினைவுகளால் என்னை வதைப்பதில்
தினம் தினம் உனக்கே வெற்றி.
நினைவுகளில் உன்னை சுமப்பதில்
என்றைக்கும் எனக்கே வெற்றி .

என்னை படுத்திப்பார்ப்பதில் நீ தினமும்
ஜெயிப்பதில் எனக்கு வருத்தமில்லை.
உன்னை உடுத்திப்பார்ப்பதில் நான்
ஒரு நாளும் தோற்பதே இல்லையே.

பள்ளித்தேர்வுகளில் நீ ஜெயித்ததாக
உன் மார்தட்டி குதூகலிக்கிறாய்.
என் தவறால்தான் நீ ஜெயித்தாய்
அதனால் ஒரு முறை என் மார்தட்டி
மறுபடியும் நீ ஜெயித்துக் கொள்.

என் பருவங்களின் வெற்றியில் உன்
பார்வைக்கு பங்குண்டு
உன் பார்வைகளின் வெற்றியில் என்
பருவங்களுக்கு பங்குண்டு.

உழவில் ஜெயிக்கிறாய்,
உறவில் ஜெயிக்கிறாய்.
உளறலில் ஜெயிக்கிறாய்.
அட உறங்காத ஜென்மமே
இதோ, ஊடலிலும் ஜெயிக்கிறாய்.

வாழ்க்கையை ஜெயிக்கிறாய்
வறுமையை ஜெயிக்கிறாய்.
வராமல் வந்த வனிதை என்
தோள் தொட்டு – அட
அந்த முத்தங்களையும் ஜெயிக்கிறாய்.

எனக்கும் உனக்குமான
அத்தனை போட்டிகளிலும்
ஜெயிப்பது நீயானாலும்
விட்டுக்கொடுத்ததால்
வென்றவள் நானானேன்.

அடேய் சரவணா ………
வீம்பு கொண்டு நீ ஜெயித்த ஒன்று
விட்டுக்கொடுக்காமல்
நான் தோற்ற ஒன்று.
உனக்கு நேற்று வந்தது
எனக்கு நாளை வருவது.

நாம் என்பது எப்போதும் தோற்பது
வாழ்க்கை என்பது என்றுமே ஜெயிப்பது.