ஊறுக்கு வெளியில் ஒற்றைப் பனை மரம் - தமிழிசை

ஊறுக்கு வெளியில் ஒற்றைப் பனை மரம் – தமிழிசை

எழிலுரு மங்கையவள்; என்னுடை காதலி
ஏகாந்தத்தின் இனிமைகளுக்கு எனக்குரை அளித்தவள்
காற்றோடு கலவிகொள்ளும் பச்சைநிறப் பட்டாடையில்
கண்ணுக்குக் கள்ளூட்டி நாணத்தோடு நகைத்தவள்

சிந்திய சிரிப்பெல்லாம் வாய்க்காலாடும் சிற்றோடை
அவளிட்ட திலகமெல்லாம் ஆதவன் திங்கள்
சிற்றிடை மேகலையின் சிதறியவை விண்மீன்கள்
அகம்கொண்ட இலச்சைகளோ அந்திப்பொழுது வானம்

இதயமெங்கும் இனிப்பவள்; என்னுடை காதலி
இங்கிதக் கவிதைகளுக்குக் கருப்பொருள் கொடுத்தவள்
மாசற்ற மனதினால் மனமெங்கும் மலர்ந்து
கதிரொழிந்த விண்கொண்டு கண்எழுதி நின்றவள்

உடுப்புகளைத் துறந்து உலைகளை உடுத்தியே
புகைக்கவும் தொடங்கினாள் புதுமைகள் புகுந்திட
கான்கிரீட் காளான்களால் கற்பையும் இழந்தாள்
கடல்கண்ட மழைத்துளியாய்க் கவின்முகம் ஒழிந்தாள்

வாலையவள் வளம்கண்டு வான்மகளும் வஞ்சிக்க
வதனத்தின் வனப்பையெல்லாம் வறட்சிக்கு வார்த்துவிட்டாள்;
அடையாளம் அகன்றவளை அறிவிக்கவே நிற்கிறதின்றும்
ஊருக்கு வெளியில் ஒற்றைப் பனைமரம்..

#தமிழிசை