காலநதியில் ஒரு  துளி... ...கோவி லெனின்.

காலநதியில் ஒரு துளி… …கோவி லெனின்.

முற்றுறாத பொழுதுகள்
சொட்டுச் சொட்டாய் ஊற்றெடுக்க
சற்றும் ஓய்வின்றி
சலசலத்து ஓடுகிறது காலநதி.

நீராடவும் ஏரோடவும்
நீந்தும் உயிர்களின் வீடாகவும்
யாருக்குச் சொந்தமென
யாதொருவர் அறியாமலும்
பயணிப்பது அதன் இயல்பு..

கால் கழுவுகிறார் ஒரு கரையில்..
வாய் கொப்பளிக்கிறார் மறு கரையில்..
அவரவர் பாவங்களையும் தன்னில் சுமந்து
எவரொருவரையும்  புனிதமாக்கி
கடலின் உடலில் சேர்க்கும்
அதன் தவவாழ்வை
விழிமூடாமல் பார்த்தபடி இருக்கிறது
விரிவானம் நெடுங்காலமாய்.