இன்னொரு பன்னீர் மரம் - இராஜாத்தி சல்மா

இன்னொரு பன்னீர் மரம் – இராஜாத்தி சல்மா

அறுபடுகிற
மரங்களினூடே
பன்னீர் மரம் விசும்பும் ஓசை
என் செவிகளில் கடும் ஒலியாய் ரீங்காரிக்கிறது

தம் நிழல் விழுந்திருந்த சாலைகளில்
அவை தலைகுப்புற
சயனித்திருக்கின்றன

பெருமரங்கள் வீழ்ந்த
வெற்றிடத்தின் மீது
குவிகின்றன
கருணை பழுத்த பார்வைகள்

மாலை நேர நடைப்பயற்சிக்கு
என்னோடு நறுமணங்களை அனுப்பிக்கொண்டிருந்த
மரம் எஞ்சிய மலர்களோடு
காய்ந்த நிலத்தில்
இறைந்துகிடக்கிறது
என்
ஞாபகங்களின் சிறகுகள்

காற்றின் இலக்கற்ற பாய்ச்சலுக்கு
கூடுகளை தொலைத்து விட்ட பறவைகளின் கூக்குரல்கள் அந்திகளில் எனது மூளைக்குள் குடியேறி குறுகுறுக்கின்றன

விடை கொடுக்கவென
துக்கத்தை பகிர்ந்தபடி
காத்திருக்கிறோம்
நானும் மரத்தின் மீது
வழமையாய் கால் தூக்கும் அந்த தெருநாயும்

அதன் வேருக்கடியில்
நொறுங்கிக்கிடக்கிறது
அழுக்கடைந்த எங்களது மூச்சுக்காற்று

பள்ளி வளாகத்தில்
ராபியாவிடம் விடைபெறாது சென்று விட்ட முதலாவது பன்னீர் மரம்

இன்று அவளால் விடை கொடுக்க காத்திருக்கிறது இந்த இரண்டாவது
பன்னீர் மரம்

கசியும் கண்களை
தாழ்த்தியபடி …இந்த
காத்திருப்பு