நக்கண்ணையார் - சக்தி ஜோதி

நக்கண்ணையார் – சக்தி ஜோதி

ஒரு பெண் தன்னை உணர்த்துகிறாள்:

“நேரடியாக
குகையிருட்டில்
மூங்கில் காட்டில்
வெடித்த சிக்கி முக்கித் தீயின்
வெளிச்சத்தைத் தரிசிக்கவில்லை
வெப்பத்தை ஸ்பரிசிக்கவில்லை.
அதன் அணையாத யாத்திரையை
நம்புகிறேன் ஆனால்
அடுத்த யுகங்களின் குகைகளுக்கும்
வெளிச்சம்தரும்
வீரியம் உண்டு அதற்கு.
தீயின்றி தீராது உலகம்.
தீயும் தீர்ந்துவிடாது.“
கல்யாண்ஜி என்கிற வண்ணதாசனின் படைப்புலகத்தைத் தொடர்வது என்பது ஒவ்வொருவருக்கும்  தங்களுடைய அகவாழ்வின் நுண்ணிய இழைகளை தங்களுக்குள் உணர்வதாகவே எப்பொழுதும் இருக்கிறது. ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களுக்கான வெளிச்சத்தை, தங்களுக்கான வெப்பத்தைத் தேர்வு செய்வதென்பது வாழ்வின் தீராத பெருவிருப்பமாக இருக்கிறது. கணக்கிடவியலாத ஆதிகாலத்தின் தொடக்கத்தில் எங்கோ ஒரு மிகப்பழமையான நிலத்தில் ஆதிப்பெண்ணொருத்தி, தன்னுடைய இணையான ஆணிடம் தன்னுடைய ஒளிர்வின் திரியினை ஏற்றியிருப்பாள். யுகங்களைக்கடந்தும் தொடர்ந்திருக்கும் அச்சிறுநெருப்பின் ஆதித்தீயை ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வின் ஒருகணத்திலாவது உணர்ந்துவிட வேண்டுமென்ற தவிப்பிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தத் தீயினைச் சுவைக்க சிலருக்கு வாய்க்கிறது.

ஒரு மனிதனை இயக்கும் அடிப்படையான இச்சைகள் பசியும் காமமும் என நீட்சே கூறுகிறார். இந்த இரண்டையும் இரண்டு வகையான தீ எனலாம். வயிற்றுப்பசிக்கு ஒருவன் தன்னுடைய சுய தேடலின் மூலம் உணவைக்கண்டடைந்துவிட முடியும். இந்த பசி என்கிற உணர்வுக்கு முன்பாக சில வகைப்பாடுகள் உள்ளன. காமம் என்பது ஒப்புநோக்க வயிற்றுப்பசியை விடவும் சிக்கலானது. இதனைத் தீர்க்க இன்னொரு மனமும் உடலும் வேண்டும். வயிற்றுப் பசியின் பொழுது விரும்புகிற உணவிலிருந்து கிடைக்கிற உணவினால் பதிலி அல்லது ஈடு செய்துவிட முடியும். ஈடுசெய்யவியலாததும் மாற்று வழிமுறை செய்துகொள்ள இயலாததுமாக காமம் இருக்கிறது. ஆற்றுப்படுத்த முடிகிற இணை உடனிருக்கையில் காமம் ஆக்கபூர்வமானதாக இருக்கிறது. ஆற்றுப்படுத்த வழிமுறையற்ற நிலையில் காமம் என்பது அழிவுக்குக் காரணமாகவும் ஆகிறது.

வாழ்வில் புறக்காரணிகளினால் அலைக்கழிக்கப்படுகிற அளவுக்குச் சற்றும் குறைவில்லாத வகையிலேயே அகம் சார்ந்த அலைக்கழிப்புகளும்  ஏற்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் அகம் சார்ந்த சலனங்களே புறக்காரணிகளை உருவாக்குகிறது. ஒருவரின் அகம்சார்ந்த உணர்வுகளை மிகச்சரியான புரிதலுடன் பகிர்ந்துகொள்ள முடிகிற இணைக்கான விழைவே ஒட்டுமொத்த வாழ்வுக்கான தேடலாக இருக்கிறது. ஆனால் பலசமயங்களில் இதற்கான அலைச்சல்தான் எல்லாத் துயரத்திற்கும் அல்லது இன்பத்திற்கும் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே வாழ்வு முடிந்துவிடுகிறது.

“என்னை யாருமே சரியாகப் புரிந்துகொள்வதில்லை” என தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் சொல்லாதவர்கள் இருக்கமுடியாது. இதில் சொல்லப்படுகிற “யாருமே” என்கிற சொல் மிக முக்கியமானது. யாருமே எனச் சொல்கிற நபர், அவர் ஆணாகிலும் பெண்ணாகிலும் அனேகமாக எதிர்பாலினரிடம்தான் இந்தப் புரிந்துகொள்ளுதலை எதிர்பார்க்கிறவர்களாக  இருக்கிறார்கள். குறிப்பாக அவர் நேசிக்கிற ஒருவர் புரிந்துகொள்ளவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற மனத்தளர்வில் சொல்லப்படுகிற வார்த்தைதான் அது. தன் முன்னே இருக்கும் பிரியமான ஒருவரே இந்த உலகத்தின் ஒட்டுமொத்த “யாருமே” என்கிற பிம்பத்தை ஏற்றவராக இருக்கிறார்.

“யாருமே” என்று எல்லோருக்குமான அதிஉன்னத ஒற்றைச்சொல்லை ஏற்கத்தகுதியுள்ள தன்னுடைய இணையைத் தேர்வு செய்வதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. ஆணுக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வதில் இருக்கும் சமூகம் சார்ந்த உளவியல் சார்ந்த சிக்கலைவிடவும்,  ஒரு பெண்ணுக்கு அவளுக்கான ஆணைத் தேர்வு செய்வதில் மிகக்கடுமையான சிக்கல் இருக்கிறது. இங்கே சிக்கல் என்பது சூழலின் சிக்கல் மட்டுமல்ல. முதலாவதாக ஒரு ஆணைத் தேர்வு செய்கிற உரிமையே பெண்ணுக்குக் கிடையாது. அப்படியே தேர்வு செய்தாலும் பெண்ணின் தேர்வுக்கு பெரும்பாலும் பெற்றோரிடம் அனுமதி கிடைப்பதில்லை. சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வகையான புறம்சார்ந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக பெண்ணின் அக அலைக்கழிப்பே காலங்காலமாக தீராத அவளின் போராட்டங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

ஒரு ஆணிடம் ஈர்ப்பு ஏற்பட்டவுடன் அது காதல்தான் என முடிவு செய்வதற்குள்  ஒரு பெண்ணின் மனதிற்குள் அவனைப்பற்றிய கேள்விகளும் பதில்களும் இடைவிடாது எழும்பும். அவனைப்பற்றிய கேள்விகளுக்கு அவளே அமைத்துக்கொள்கிற பதில்களுக்குள் விதையென உருவாகிக் கொண்டிருப்பாள். சிறுதூறலின் கணத்தில், அது காதல்தான் என அவள் உணர்ந்துகொண்டவுடன் அவளே அறியாதவண்ணம் அடிநிலம் முழுவதும் படர்ந்த வேர்களுடன் கிளைத்துப்பெருகத் தொடங்கிவிடும்.

உறையூர் வீரைவேண்மான் வெளியன் தித்தனது மகன் சோழன் கோப்பெரு நற்கிள்ளியிடம் காதல் கொண்ட ஒரு பெண்ணின் நிலைபற்றி  நக்கண்ணையார் பாடிய பாடல்,

“என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்,
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்,
ஆடுஆடு என்ப, ஒரு சாரோரே;
ஆடு அன்று என்ப, ஒரு சாரோரே;
நல்ல, பல்லோர் இரு நன்மொழியே;
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே.”
என்னுடைய தலைவனுக்கு ஊர் இது அன்று, என்னுடைய தலைவனுக்கு நாடு இது அன்று. ஒரு சாரார் அவன் வெற்றியைப் போற்றுவார்கள். ஒரு சாரார் இது வெற்றியன்று எனச் சொல்வார்கள். என்னுடைய காதுகளுக்கு இருசாரார் சொற்களும் இனிமையுடையவையே. நான் என்னுடைய காற்சிலம்புகள் ஒலிக்குமாறு ஓடிச் சென்று வீட்டின் பக்கத்தில் உள்ள பனைமரத்தில் சாய்ந்து நின்றேன். முடிவில் அவன் வெற்றியடைதலையே கண்டேன்.

ஆமூர் மல்லனுக்கும் நற்கிள்ளிக்கும் மற்போரும் விற்போரும் நிகழ்ந்தன. இதனை ஒருபெண் பார்க்கிறாள். வெளியூரைச் சேர்ந்த ஒருவரின் வெற்றியை பொதுவாக உள்ளூர்க்காரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் அவனுடைய வெற்றியை வெற்றி அல்ல என சிலர் சொல்கிறார்கள். வெற்றிதான் என சிலர் சொல்கிறார்கள். இப்படியொரு காட்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் பெண் இதனையும் பார்க்கிறார். இருசாரார் சொல்வதுமே அவளுக்கு இனிமையுடையதாக இருக்கிறது என்கிற இடத்தில்தான் இந்தப் புறக்காட்சி அகத்திற்கு இடம்பெயர்கிறது. அவனது ஆளுமையும், வீரமும் அவன் மீதான காதலை அவளுக்குள் நிகழ்த்தியவண்ணம் இருக்கிறது. இவ்விதமாக மனம் மயங்கிய தன்னுடைய நிலையை ஏற்றுகொள்வதா வேண்டாமா என்கிற போராட்டம் அவளுக்குள் நிகழத்தொடங்குகிறது. புறத்தில் ஒலிக்கிற வெற்றி என்கிற சொல்லும், வெற்றியன்று என்கிற சொல் அதனுடைய விளைவை அவளுடைய அகத்தினுள் ஏற்படுத்தத் தொடங்கிவிடுகிறது. அவளுடைய மனதுக்கும் அறிவுக்குமிடையே தர்க்கம் நிகழத்தொடங்குகிறது.

பொதுவாக சங்க இலக்கியப்பாடல்களில் வருகிற நிலக்காட்சிகள் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் இருக்கின்றன. ஒருமரமோ அல்லது ஒரு பறவையோகூட மனித உணர்வுகளை வெளிபடுத்தும் குறியீடுகளாகவே அமைந்துள்ளன.  அவள் ஓடிச் சென்று பனைமரத்தின் முழவு போன்ற அடிமரத்தில் சாய்ந்து நிற்கிறாள். இப்பொழுது அவள் புறக்காட்சியிலிருந்து முற்றிலும் விலகுகிறாள். இறுதியில் அவன் வெற்றி பெற்றான் என்று சொல்வது நடைபெற்ற மற்போர் குறித்தது அல்ல. அறிவுக்கும் மனதிற்குமிடையே மயங்கித் தடுமாறிய அவளுடைய மனமே இறுதியில் வெற்றியடைகிறது. இப்போது அவளிடம் தர்க்கங்களுக்கு இடமில்லை. பனைமரத்தின் தூர் பற்றிக் குறிப்பிடுகையில் “முழவு” போன்ற என்கிறார். முழக்கம் செய்யக்கூடிய கருவிக்கு முழவு என்று பெயர். பல்வேறு சிறிய இசைக்கருவிகள் ஒலித்துக்கொண்டிருக்கும் இடத்தில் முழவின் ஓசை ஒலிக்கப்படுமாயின் மற்றவைகளின் ஒசை எடுபடாமல் போய்விடும். அவளுடைய தர்க்கங்கள் அத்தனையும் தன்னுடைய வலுவினை இழந்து போகும்படியாக அவளுடைய மனமானது அவனுடைய பெயரை மட்டுமே முழங்குவதாக எடுத்துகொள்ள முடியும்.

நக்கண்ணையார் பாடிய பாடல் மற்றொரு பாடலில்,
“அடிபுனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
அடுதோள் முயங்கல் அவை நாணுவலே;
என் போல் பெரு விதுப்புறுக; என்றும்
ஒருபாற் படாஅதாகி,
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!”
வீரக்கழலும் கருமையான இளந்தாடியும் உடைய காளை ஒருவனுக்காக என்னுடைய கைவளையல்கள் நெகிழ்ந்தன. என்னுடைய அன்னைக்கு நான் அஞ்சுகிறேன். பகைவென்ற அவனுடைய தோள்களைத் தழுவ விரும்பினாலும் அவையினரைக் கண்டு நாணம் கொள்கிறேன். அன்னையின் பக்கமாகவும் அவையின் பக்கமாகவும் இருபக்கத்திலும் நடுக்குற்று இருப்பதுபோல இந்த ஊரும் இரண்டு பக்கத்திலும் மாறிமாறித் துன்புறுகிறது.

சரியான சூழல் அமையும் பொழுது பெண் தன்னை வெளிப்படுத்த நினைப்பாள். இதற்கு முதல்தடையாக அம்மா இருப்பதாக எண்ணி அச்சமைடைவாள். காதலில் நெகிழ்ந்திருக்கும் மகளுக்கு அம்மாவின் மிகச்சிறிய கடுஞ்சொல்லும் தாங்கவே இயலாததாக இருக்கும். மகளாக இருக்கும் பெண் தன்னுடைய அகம் சார்ந்த முதல் பொய்யை அம்மாவிடமே அரங்கேற்றம் செய்கிறாள். நாணத்தைவிட்டு அவளுடைய காதலை வெளிப்படுத்தத் தடையாக அவள் வசிக்கும் ஊர் இருப்பதாக தவிக்கத்தொடங்குவாள். அப்பொழுது அம்மாவும், உறவுகளும், ஊராரும் அவளுடைய உலகத்திலிருந்து மறைந்துவிட விருப்பம் கொள்வாள். ஒரு பெண்ணுடைய காதல் உலகமென்பது இந்த உலகத்தைவிடவும் பெரியதாக இருக்கிறது. அதனால்தான் ஒரு தேவகுலத்தார் என்கிற சங்கப்புலவர் குறுந்தொகைப் பாடலில் (குறுந்:3) “தலைவனோடு கொண்ட காதலானது இந்த உலகத்தைவிடப் பெரியது, வானை விட உயர்ந்தது, கடலைவிட ஆழமுடையது” என்கிறார்.

காதலில் அமிழ்ந்திருக்கும் பெண் யாருமே இல்லாத தனித்த இடத்திலிருப்பதை விரும்புகிறாள். அந்தத் தனிமையில், அவளுடைய காதலன் மட்டுமே எப்பொழுதும் உடனிருக்கவேண்டும் அல்லது அவனைப்பற்றிய கற்பனையில் திளைத்திருக்க வேண்டுமென நினைக்கிறாள். மனதுக்குள் வரித்துக்கொண்ட தலைவனுடன் வாழ்வதற்காக  அவர்களுக்கே உரிய தனித்த உலகத்தை ஸ்ருஸ்டித்துக்கொள்கிறாள். அவனை அடைந்து வாழத்தொடங்கும் காலத்திற்கு முன்பாகவே அவளே படைத்த உலகத்தில் கனவுகளாலும் நினைவுகளாலும் அவனோடு வாழ்ந்து கொண்டிருப்பாள். இந்த தனித்த வாழ்வை யார் ஒருவரும் அறிந்துவிடக்கூடாத இரகசியமாகக் காத்திருப்பாள். இதற்கு இடையூறு நிகழாமல் பார்த்துக்கொள்ள முயலுகிறாள். சிலசமயம் அவளின் இவ்வகையான தனித்த உணர்வுகள் அவளின் காதலனேகூட உணர்ந்துகொள்ள இயலாதது.

காதல் நிரம்பிய பெண் ஒருத்தி எப்பொழுதுமே உணர்ச்சிகளின் அழுத்தத்தில் இருக்கிறாள். சதாப்பொழுதும் நினைவுகளின் அலைக்கழிப்புக்கு ஆட்பட்டவளாக இருக்கிறாள். வேறு எந்த ஒன்றின் மீதும் பிடிப்பற்று, வேறு எந்த இடத்திலும் ஸ்திரப்பட இயலாது தவித்தபடி இருக்கிறாள். அவள் காண்பதெல்லாம் அவன், அவள் உணர்வதெல்லாம் அவன் எனவும் அவளின் சிறு அசைவும் அவனுக்காகவென தன்னை உருவாக்கிக் கொள்கிறாள். அவன்மீது கொண்ட காதலின் பரிதவிப்பே அவளை உயிர்ப்புடையவளாக வைத்திருக்கிறது.

1939 இல் வெளியான “ Gone with the Wind “ என்கிற திரைப்படத்தில் கதையின் நாயகியாக வருகிற ஸ்கார்லெட் என்கிற பெண்ணுக்கு ஆஷ்லே என்பவனின் மீது காதல். அவனுக்கோ வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. இது தெரிந்தபின்பும் இந்தப்பெண் தன்னுடைய காதலை அவனிடம் வெளிப்படுத்துகிறாள். அந்தத் கதை முழுக்க நிறைவேறாத காதலுடன் அந்தப்பெண் அலைந்து கொண்டிருக்கிறவளாக இருக்கிறாள். மனதில் பொதிந்து வைத்திருக்கும் காதலுடன் மூன்று திருமணங்களை செய்கிறாள், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள், கிட்டத்தட்ட ஏழு எட்டு வயதில் அவளுடைய குழந்தை இறந்து போகிறது. இத்தனைக்கும் பிறகும் ஆஷ்லே மீது கொண்ட காதலை கைவிட இயலாதவளாக இருக்கிறாள். கதையின் பின்னணியில் ஒரு கொலை செய்கிறாள். பணத்திற்காகப் பொய் சொல்கிறாள், ஏமாற்றுகிறாள். எந்த நிலையிலும் ஆஷ்லேவுக்காக ஏங்குகிறாள். மார்க்ரெட் மிச்சலின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டத் திரைப்படம். பதினோரு மாகாணங்களைச் சேர்ந்த ஒரு சிறு குழுவினரிடம் அடிமைகளாக இருந்த நீக்ரோக்களை விடுவிக்க, அன்றைய அமெரிக்க அரசு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு காலகட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள கதை இது. போருக்கான காரணத்தையும், போரில் மரித்த அத்தனை உயிர்களையும் புறந்தள்ளும் வகையில் ஸ்கார்லெட் என்கிற பெண்ணின் காதல் மிக நுட்பமான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருதலையாகக் காதல் செய்வது என்பது உலகளாவிய உணர்வுதான். இந்த உணர்வு, தமிழ் நிலத்தில் கைக்கிளை என்கிற திணையில் வகைபடுத்தப்பட்டுள்ளது. இந்த வெளிப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டத் தமிழ்த்திரைப்படங்களும் எண்ணற்றவை. பெரும்பாலும் ஒருதலைக்காதல் என்பது ஆணுக்கு உரியதாகக் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படங்களே ஆரம்ப காலங்களில் உருவாகின. பின்னாட்களில் இருபாலினருக்குமாக பொதுமைப்படுத்தப்பட்டன. பாலுமகேந்திராவின் ஜூலி கணபதி என்கிற திரைப்படம் கைக்கிளையின் வன்மையான பகுதியைப் பேசுகிறது. அதாவது பெண் கொண்ட ஒருதலையான காதலின் நிறைவேறாத நிலையை, சற்று மனம் பிறழ்ந்த பெண்ணை வைத்து கதை சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் மனப்பிறழ்வைச் சொல்வது அந்தத் திரைப்படத்தின் நோக்கமல்ல. நிறைவேற்றிக்கொள்ள இயலாத காதலினால் ஏற்படுகிற பித்து நிலையின் தீவிரத்தைச் சொல்கிறது. ஆற்றுபடுத்த இயலுகிற காதலின் தீ ஆக்கப்பூர்வமாகவும் ஆற்றுப்படுத்தவே இயலாமல் போகும்பொழுது அது பேரழிவுக்கு இட்டுச்செல்கிறது. சமீபகாலத்தின் பல நிகழ்வுகளின் வழியாக கைக்கிளையின் தன்மையென்பது மென்மையும் தியாகமும் மட்டுமல்ல என்கிற அப்பட்டமான உண்மையை ஒத்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தனக்குப் பிடித்திருக்கிறது என்பதாலேயே அவனுக்கோ அல்லது அவளுக்கோ நம்மைப் பிடித்திருக்கும் என்கிற அடிப்படையான மனஉணர்வின் உந்துதலில் தொடங்குகிறது கைக்கிளை. அவளை அல்லது அவனை ஏற்றுக்கொள்ள இயலாத சூழலில் அவன் அல்லது அவள் இருக்கலாம். என்றபோதிலும் கண்களின் சைகைகளினால்  அவர்களுக்கு மட்டுமே உணரமுடிகிற மிக நுட்பமான பரிமாற்றம் அவர்களுக்கிடையே நிகழ்ந்திருக்கும். இந்த நுட்பமான பரிமாற்றமே காதல் என்கிற உணர்வுக்குள் ஒருவரை நகர்த்துகிறது. எதிரே இருப்பவரால் உணரப்படாத காதல் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம். சூழலினால் இணைந்திருக்க இயலாமல் போகலாம். சமூகத்தின் பார்வையில்தான் அது கூடாக்காதலாக பிரிந்திருக்கும். மனதிற்குள் அவர்கள் தங்களுக்கான ஆதித்தீயினை உணர்ந்திருப்பார்கள். சமூக வரையறையில் ஒருதலையாகக் காதல் வயப்பட்டிருப்பவர்கள் தங்களுக்குள் என்றுமே தீராத தவிப்பிற்குட்பட்டவராக இருக்கிறார்கள். எவ்விதமாகிலும் காதலின் தீயின்றி ஒருவரின் வாழ்வு தீர்வதில்லை.

ஒரு பெண்ணுக்கு தான் விரும்புகிற ஆணைப்பற்றிய செய்திகளைச்  சமூகத்தின் முன்னிலையில் வைக்கத்தான் தடைகள் அதிகம். ஆனால் அவள் விரும்புகிற ஆணிடம் வெளிப்படுத்த அவள் தயங்குவதேயில்லை என்பதுதான் அடிப்படையான உண்மை. ஒரு பெண்ணுக்காக ஒரு ஆண் உருகித் தவிக்கிறான் என்பதை அந்தப் பெண்ணிடம் உணர்த்துவதற்கு வேண்டுமானால் ஆணுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். ஆனால் ஒரு ஆணுக்காக சமிக்க்ஷையை எந்தச்சூழலிலும் அந்த ஆணிடம் பெண் உணர்த்திவிடுகிறாள்.
***********************************************************************************
நக்கண்ணையார்:

பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் என்கிற பெயரிலும் குறிப்பிடப்படுகிறார். நாய்கன் எனும் பெயர் வணிக மரபினரைக் குறிக்கும் சொல். சோழநாட்டின் தலைநகர் உறையூரில் வாழ்ந்தவர்.

புறநானூற்றில் உள்ள 83,84,85  ஆகிய பாடல்கள் உறையூர் வீரைவேண்மான் வெளியன் தித்தனது மகன் சோழன் கோப்பெரு நற்கிள்ளியிடம் கொண்ட காதலில் நக்கண்ணையார் பாடிய பாடல்கள். தன்னிலையில் எழுதப்பட்ட பாடல்கள் என்பதால் உரையாசிரியர்கள் நற்கிள்ளியின் மீது  நக்கண்ணையார் கொண்ட காதலாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆமூர் மல்லனை எதிர்த்து நற்கிள்ளி மற்போரும் விற்போரும் நிகழ்த்தி வெற்றிபெற்றான் என்பதை சாத்தந்தையார்(புறம்:80) குறிப்பிட்டுள்ளார். சாத்தந்தையார் பாடல்களின் அடிப்படையில் நக்கண்ணையாரின் பாடல்கள் நற்கிள்ளிக்கானவை என அறியப்பட்டுள்ளது.

இலக்கண மரபுப்படி அகப்பாடலில் தலைவன், தலைவி பெயர் குறிப்பிடப்படுவதில்லை, பெண், தலைவனை முதலில் காண்பதும் தன்னுடைய காதலை முதலில் வெளிப்படுத்துவதும் மரபில்லை. இந்தப்பாடல்களில் தலைவனை பெண்தான் பார்க்கிறாள், காதலை வெளிப்படுத்துகிறாள். மேலும் தலைவன் இன்னார் என்கிற குறிப்பு உணர்த்தப்படுகிறது. என்பதால் இந்தப்பாடல்கள் புறத்திணையில் இணைக்கபப்ட்டுள்ளன.
இதனை நச்சினார்க்கினியர், “இது பெருங்கோழி நாய்கன் மகளொருத்தி, ஒத்த அன்பினாற் காமமுறாத வழியும் குணச் சிறப்பின்றி தானே காமுற்றுக்கூறியது இதனின் அடக்குக” (தொல்.புறத்திணை சூ.28)எனக் குறிப்பிடுகிறார்.
இவரது பாடல்கள்: அகநானூறு:252 நற்றிணை: 19,87 புறநானூறு:83,84,85  மொத்தம்: 6
***************************************************************************************

திணைக் குறிப்புகள்:

அகத்திணைகள்: “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழு திணை என்ப.”(தொல்.பொருள்: 947 )அதாவது கைக்கிளை, குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பாலைத்திணை, பெருந்திணை.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு திணைகளும் நிலம் சார்ந்த உணர்வுவகைப்பட்டவை. இவற்றின் உரிப்பொருள் முறையே, புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல் ஆகியன. குறிஞ்சிக்கும் முல்லிக்கும் இடைப்பட்டப் பகுதியான பாலைக்குப் பிரிவு என்பது உரிப்பொருள். இந்த உணர்வு ஒருவகையில் எல்லா நிலத்திற்கும் இசைவானது.

கைக்கிளை:
“காமம் சாலா இளமையோள்வயின்…. “ (தொல்.பொருள்: 999) என்கிற நூற்பா சொல்வது, கைகூடாத காமம், கட்டுகடங்காத இச்சை காரணமாக புகழ்வதும், இசைவு இல்லாது போனால் இகழ்வதும். ஒருவரிடமிருந்து இசைவான மறுமொழி கிடைக்காத நிலையில் தனக்குத் தானே பேசி இன்புறுதல் ஆகிய நிலைகள் கைக்கிளை எனப்படுகிறது.

பெருந்திணை:
“ஏறிய மடல் திறம், இளமை தீர் நிறம்….” (தொல்.பொருள்: 1000,1001) மடலேறுதல், காம இச்சையில் மூழ்குதல், கண்மூடிக்காமம், அடங்கா ஆசை ஆகிய நிலைகள் பெருந்திணைக்கு உரியன. இவை நான்கும் கைக்கிளைக்கும் பொருந்தும்.

புறத்திணைகள்: வெட்சித்திணை, வஞ்சித்திணை, உழிஞைத்திணை, தும்பைத்திணை, வாகைத்திணை, காஞ்சிச்திணை, பாடாண்திணை
*************************************************************************************
நன்றி : குங்குமம் தோழி

ஓவியம்:  ஷ்யாம் சங்கர்